உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தைச் சேர்ந்த ஷிஃபாலி கேசர்வானி என்ற 22 வயதுடைய இளம்பெண், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டார் கொடுத்த வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணமான நான்காவது நாளே கணவரின் கொடுமை தாங்க முடியாமல் அந்தப் பெண் தனது பிறந்த வீட்டிற்குத் தப்பி வந்திருந்தது தெரியவந்துள்ளது.

தனது கணவர் மதுபோதையில் தடியால் அடித்து துன்புறுத்தியது மட்டுமின்றி, மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டதையும், புகுந்த வீட்டில் தனக்கு உணவுகூட வழங்காமல் சித்திரவதை செய்ததையும் அவர் தனது உறவினர்களிடம் வேதனையுடன் பகிர்ந்துகொண்டார்.

மீண்டும் புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், மனமுடைந்த அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக 28 பக்கங்கள் கொண்ட உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டுத் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்தக் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு, பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் மற்றும் மைத்துனர் ஆகிய நால்வர் மீதும் வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.