மத்தியப் பிரதேச மாநிலம் ஆகர்-மால்வாவைச் சேர்ந்த சலோனி ஜெயின், தனது திருமணத்தை வித்தியாசமான முறையில் நினைவுகூரும் வகையில் நெகிழ்ச்சியான முயற்சியை மேற்கொண்டுள்ளார். பொதுவாக திருமண நிகழ்ச்சிகளில் அலங்காரம், விருந்து உள்ளிட்டவற்றுக்காக அதிகளவில் செலவு செய்யப்படும் நிலையில், தேவையற்ற செலவுகளை குறைக்க அவர் முடிவு செய்தார். அந்த பணத்தில் ஒரு பகுதியை உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பயன்படுத்தினார். இதன் மூலம் தனது திருமணத்தை ஒரு சமூகப் பயனுள்ள நிகழ்வாக மாற்றியுள்ளார்.
சலோனி ஜெயினின் முயற்சியின் விளைவாக, மோதி சாகர் குளத்தின் கரையில் பறவைகளுக்காக 6 மாடி கொண்ட பிரமாண்டமான தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாடியிலும் பறவைகள் தங்குவதற்காக தனித்தனி சிறிய கூடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறிய மற்றும் பெரிய பறவைகளின் அளவுக்கு ஏற்ப வெவ்வேறு வடிவிலான நுழைவுவாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு தளத்திலும் கூரை அமைக்கப்பட்டுள்ளதால் வெயில் மற்றும் மழையில் இருந்து பறவைகள் பாதுகாப்பாக தங்க முடியும்.
இந்தப் பறவைகள் தங்குமிடத்தை அமைக்கும்போது அவற்றின் இயற்கையான தேவைகளையும் கருத்தில் கொண்டுள்ளனர். குளத்தின் அருகே அமைந்துள்ளதால் பறவைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் பெரிய மரங்களும் இருப்பதால் அவை இயற்கையான சூழலில் இருப்பதைப் போன்ற உணர்வுடன் தங்க முடியும். திருமணத்தில் ஒருநாள் செலவாகும் பணத்தை விட, உயிரினங்களுக்காக செய்யப்படும் ஒரு சிறிய முயற்சி நீண்ட காலம் பயனளிக்கும் என சலோனி தெரிவித்துள்ளார்.
திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளை சமூகத்துக்கும் இயற்கைக்கும் பயனளிக்கும் வகையில் மாற்ற முடியும் என்பதற்கு சலோனி ஜெயினின் முயற்சி ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. பொதுவாக திருமண விழாக்களில் செய்யப்படும் பல செலவுகள் சில காலத்துக்குப் பிறகு மறந்துபோகும் நிலையில், பறவைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த 6 மாடி தங்குமிடம் நீண்ட காலம் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மோதி சாகர் குளத்துக்கு வரும் பொதுமக்களுக்கும் இந்த இடம் உயிரினங்களின் மீதான அக்கறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
