திமுகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 13-வது முறையாகக் களம் காண்பதன் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.
மேலும் 1971-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 12 முறை சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்த துரைமுருகன், அதில் 10 முறை வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளார். தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதியின் நீண்டகால சாதனையைத் தற்போது துரைமுருகன் தொட்டுள்ளார்.
இருப்பினும், இந்தச் சாதனைப் பயணத்தில் ஒரு முக்கிய வேறுபாடும் உற்றுநோக்கப்படுகிறது. கலைஞர் கருணாநிதி தான் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் ஒருமுறை கூடத் தோல்வியடையாமல் வெற்றி பெற்று ‘தோல்வியே காணாத தலைவர்’ என்ற தனித்துவமான வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர்.
மறுபுறம், துரைமுருகன் 12 முறை போட்டியிட்டு 10 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது 13-வது முறையாகக் காட்பாடியில் களமிறங்குகிறார். திமுகவின் அரசியல் வரலாற்றில் அண்ணாவிற்குப் பிறகு கருணாநிதியுடன் நீண்டகாலம் பயணித்த ஒரு மூத்த தலைவர், அவரது போட்டியிடும் எண்ணிக்கையைச் சமன் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
