சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளதாகத் தெரிவித்து தவெக அரசு மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “இன்றைக்குத் தமிழ்நாட்டில் அந்த அளவுக்கு வெட்டு குத்துச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. கறிக்கடையில் கூட இந்த அளவுக்கு வெட்ட மாட்டார்கள்” என்று அவர் அவையில் ஆவேசமாகப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தனது உரையில் தொடர்ந்து பேசிய அவர், “தவெக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு மாநிலத்தில் 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. ஆனால், உண்மைச் சம்பவங்களை மறைத்து அதனை வெறும் காதல் மரணங்கள் என்று ஊடகங்களில் சொல்லப்படுவது வழக்கமாக இருக்கிறது” எனக் கூறி ஊடகங்களின் போக்கையும், அரசின் நடவடிக்கைகளையும் கடுமையாகக் விமர்சித்தார்.
மாநிலத்தில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள அரசு உடனடியாக இதில் தலையிட்டுச் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். உதயநிதியின் இந்த அதிரடியான பேச்சு மற்றும் கறிக்கடை ஒப்பீட்டு விவாதம் சட்டமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளதுடன் சோஷியல் மீடியாவிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
