தமிழகத்தின் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய கரூரில் உள்ள பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதோடு ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். கரூர் ராமகிருஷ்ண புரத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவர்களின் காரை உடைத்து தாக்குதல் நடத்தினர்.

இதனால் 4 அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் கரூரில் நிலைமை கை மீறி போன நிலையில் உள்துறை செயலாளரான அமுதா ஐஏஎஸ் முதல்வர் ஸ்டாலின் ஊரில் இல்லாததால் உதயநிதி ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு பேசி உங்கள் ஆதரவாளர்களை அமைதியாக இருக்க சொல்லுங்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போகிறது என்று அவரை கடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செந்தில் பாலாஜி தன்னுடைய ஆதரவாளர்களிடம் அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வருமானவரித்துறை அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் கலாட்டா செய்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.