கோவையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சமூக வலைதளங்களின் தற்போதைய போக்கு குறித்துப் பரபரப்பான கருத்துக்களை முன்வைத்துள்ளார். விழாவில் பேசிய அவர், “தற்போது சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், அப்படி கருத்து சொல்பவர்களின் தகுதி என்ன என்பதை நாம் முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

​மேலும் பேசிய அவர், “சோஷியல் மீடியாவில் வரும் தகவல்களைப் பார்த்த உடனே அதை அப்படியே கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்த்து, உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதுதான் தந்தை பெரியார் நமக்குச் சொல்லித் தந்த பகுத்தறிவு” எனத் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தினார். தவெக-வின் டிஜிட்டல் அரசியல் மற்றும் சோசியல் மீடியா விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ள கனிமொழியின் இந்த பகுத்தறிவுப் பேச்சு அரசியல் அரங்கில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.