தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என அமைச்சர் பொன்முடி கூறியதற்கு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, மும்மொழிக் கொள்கை வேண்டாம் என முடிவெடுக்க வேண்டியது மாணவர்களின் பெற்றோரா அல்லது பொன்முடியா.? சமச்சீர் கல்வியை முதலில் கொண்டு வந்தது கருணாநிதி தானே. அப்படி எனில் ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் எதற்காக சமச்சீர் கல்வி இல்லை. தமிழகத்தில் உள்ள 294 பொறியியல் கல்லூரிகளில் 980 ஆசிரியர்கள் போலியான ஆதார் அட்டையை பயன்படுத்தி வேலை பெற்றுள்ளனர்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் இல்லை என்றால் நீங்களே கருணாநிதியை மதிக்கவில்லை என்று தானே அர்த்தம். அதன் பிறகு மொழிக் கொள்கையில் பிடிவாதமாக இருந்தால் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீரசாமி, திமுக எம்பி டிஆர் பாலு ஆகியோர் நடத்தும் அனைத்து சிபிஎஸ்சி பள்ளிவாசல்களிலும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம். முதலில் அதை எல்லாம் சமச்சீர் கல்வியாக மாற்றுங்கள். இல்லையெனில் வாயை மூடிவிட்டு இருங்கள். மாணவர்கள் எத்தனை மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். அது அவர்களுடைய விருப்பம். மேலும் ஒரு மொழியை படிக்க கூடாது என்று தடுப்பது கூட ஒருவகை திணிப்புதான் என்று கூறினார்.