நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருவதால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும் தான் சூரியகாந்தி எண்ணெய், கோதுமை, பார்லி போன்ற பொருட்களின் முக்கிய ஏற்றுமதி மையமாக இருந்தது.

இந்த தானியங்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளுக்கு கருங்கடல் மூலமாக ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 18ஆம் தேதியோடு ரஷ்யா ஒப்பந்தம் கால வாதியாகிவிட்டதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் இந்த முடிவினால்  தானியங்களின் விலை அதிகரித்து மில்லியன் கணக்கான மக்கள் பசியால் வாடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐநா ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் “69 நாடுகளில் 362 மில்லியன் மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது ரஷ்யாவின் முடிவால் தானிய விலை உயர்வு வளரும் நாடுகளில் கடுமையாக உணரப்படும். பலர் பட்டினியால் இறக்கக்கூடும்” எனக் கூறியுள்ளார்.