விருதுநகர் மாவட்டம் புலிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி பொன்னழகு. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு முத்துப்பாண்டி உடல்நல குறைவால் உயிரிழந்தார். இதனால் பொன்னழகு விறகு வெட்டி தனது மூன்று பிள்ளைகளையும் வளர்த்து வருகிறார். பொன்னழகு மகள் பூமாரி திருச்சியில் சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி 2023 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
இவர் 573 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் படித்து சாதித்தார். சிறுவயதில் இருந்து மருத்துவம் படிக்க விரும்பிய பூமாரி சேலத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற நீர் தேர்வில் தேர்ச்சி பெற்று பல் மருத்துவம் படிக்க தேர்வானார்.
ஆனால் பூமாரிக்கு பல் மருத்துவம் படிக்க ஆர்வம் இல்லாததால் எம்பிபிஎஸ் படிக்க ஆசைப்பட்டு மீண்டும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார். தற்போது 7.5% சதவீத இட ஒதுக்கீட்டில் பூமாரிக்கு சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கு குடும்பத்தினரும் கிராம மக்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
நீட் தேர்வு வெற்றி பெற்ற பூமாரி கூறியதாவது, எனது தந்தை உயிரிழந்ததால் அம்மா விறகு வெட்டி படிக்க வைத்தார். எனக்கு எம்பிபிஎஸ் சீட்டு கிடைத்துள்ளது. நீட் என்பது கஷ்டமானது இல்லை. நம்முடைய முயற்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். எப்போதும் பாசிட்டிவ் திங்கியுடன் இருக்க வேண்டும். லட்சியம் இருந்தால் சாதிக்கலாம் என கூறினார்.
மேலும் எனது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் அரசும் எனது மருத்துவ படிப்பிற்கு உதவி செய்தால் எனது படிப்பை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவியாக இருக்கும் என பூமாரியும் அவரது குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
