மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேல்கள்ளந்திரியைச் சேர்ந்த செல்லபாண்டி என்பவர் கூலி தொழிலாளராக பணியாற்றி வந்தார். ஐந்து மாதங்களுக்கு முன்பு ஆட்டோ வாங்க சிலரை நம்பி பணம் கொடுத்திருந்தார். ஆனால் அந்த நபர்கள் ஆட்டோவையும் வாங்கிக் கொடுக்காமல், பணத்தையும் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு முன், ‘சிலர் என்னை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்’ என தாயிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு, மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் அழைத்தபோது செல்லபாண்டி அழகர் கோயில் சாலையில் சென்றுள்ளார். அங்கு அவ்வழியே வந்த நால்வர், திடீரென அரிவாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர். அவர் உயிர்தப்ப ஓட முயன்றபோதும், அருகிலுள்ள மளிகை  கடைக்கு புகுந்தும் பயனில்லை – கடைச்சுற்றிலும் இருந்த நபர்கள்  தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து கண்முடித்தனமாக் வெட்டியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து  காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, செல்லபாண்டியின் உடல் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது தாயார், ” குற்றவாளிகளை கைது செய்யாத வரை உடலை ஏற்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ள நிலையில், இது பணம் சம்பந்தப்பட்ட பழிவாங்கலின் விளைவாக இருந்திருக்கலாம் என காவல் துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவம் பகலில், பொதுமக்கள் நடமாடும் பகுதியில் நடந்த சம்பவம் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்ய போலீசார் தீவீரமாக ஈடுபட்டு வருகின்றனர்.