உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான சிறுவர்களின் மனம் கவர்ந்த ‘டோரேமான்’ (Doraemon) அனிமேஷன் படங்களின் இயக்குநர் சுடோமு ஷிபயாமா (Tsutomu Shibayama), நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு காரணமாகத் தனது 84-ஆவது வயதில் காலமானார்.

கடந்த 941-இல் டோக்கியோவில் பிறந்த ஷிபயாமா, அனிமேஷன் துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர். ‘ஏ ப்ரோ’ (A Pro) நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 1984-ஆம் ஆண்டு ‘டோரேமான்’ தொலைக்காட்சித் தொடரின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

கடந்த 1984 முதல் 2005 வரை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டோரேமான் தொடரை வழிநடத்தியவர் இவரே. 1983-இல் வெளியான ‘நோபிட்டா அண்ட் தி கேஸில் ஆஃப் தி அண்டர்சீ டெவில்’ (Nobita and the Castle of the Undersea Devil) தொடங்கி, அடுத்தடுத்து 22 டோரேமான் திரைப்படங்களை இயக்கி உலக சாதனை படைத்தார்.

டோரேமான் மட்டுமல்லாது, ‘சிபி மாருக்கோ-சான்’ (Chibi Maruko-chan), ‘நின்டாமா ரந்தாரோ’ (Nintama Rantaro) மற்றும் புகழ்பெற்ற ‘ரன்மா 1/2’ (Ranma 1/2) தொடரின் முதல் பாகம் ஆகியவற்றை இயக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. மிகையான நகைச்சுவை இன்றி, எதார்த்தமான அதேசமயம் நல்லொழுக்கக் கருத்துகளைப் போதிக்கும் வகையில் இவரது படங்கள் அமைந்திருக்கும். அனிமேஷன் துறைக்கு இவர் ஆற்றிய ஈடுசெய்ய முடியாத பங்களிப்பைப் பாராட்டும் வகையில், 2018-ஆம் ஆண்டு ‘டோக்கியோ அனிமேஷன் விருது விழா’வில் இவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 6-ஆம் தேதியே அவர் காலமான போதிலும், அவர் அங்கம் வகித்த ‘அஜியா-டோ’ (Ajia-do) அனிமேஷன் ஸ்டுடியோ தற்போதுதான் இச்செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்குகள் நெருங்கிய உறவினர்களுடன் தனிப்பட்ட முறையில் நடந்து முடிந்துவிட்டன. மேலும் விரைவில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஒரு நினைவுக்கூட்டம் நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.