ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பேருந்து கேர்மாளம் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கெத்தேசால் என்ற இடத்தில் காட்டு யானை நின்று கொண்டிருந்ததை பார்த்த பேருந்து ஓட்டுனர் நடு ரோட்டிலேயே வாகனத்தை நிறுத்தினார்.

அந்த காட்டு யானை மெல்ல மெல்ல நடந்து பேருந்தை நோக்கி வந்ததால் ஓட்டுநர் வாகனத்தை பின்னோக்கி இயக்கினார். அப்போது யானை மெதுவாக பேருந்து முன் பக்க கண்ணாடியை தடவியது. திடீரென கண்ணாடி மீது துதிக்கையால் ஓங்கி அடித்ததால் கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது. இதனால் அச்சத்தில் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இதனையடுத்து யானை அங்கும் இங்கும் உலா வந்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இது தொடர்பான காட்சிகளை ஒருவர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.