மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலம் அருகே பொட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த மகாராஜாவின் மகன் சதீஸ்குமார் (21), தும்பப்பட்டியைச் சேர்ந்த ராகவி (29) என்பவருடன் பழகி பின்னர் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ராகவியின் கணவர் செல்வம் 3 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிலே வசித்து வந்தார். காலப்போக்கில் இருவரும் ஊரை விட்டு வேறு இடத்தில் தம்பதியராக தங்கி வந்ததாக தகவல். இதற்கிடையே, “வீட்டில் இருந்த நகைகளை எடுத்துச் சென்றார்” என்று ராகவியின் பெற்றோர் புகார் அளித்ததால், போலீசார் விசாரணை தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து சதீஸ்குமார், ராகவியை மீண்டும் பெற்றோரிடம் சேர்த்துவிட்டார். அப்போது ராகவியின் சகோதரர் ராகுல் மற்றும் உறவினர்கள் சரிதா, அழகர், ஆறுமுகம், கண்ணாயி, மணிமேகலை ஆகியோர் அவரை வீட்டுக்காவலில் வைத்ததும், “சதீஸ்குமாருடன் சென்றால் இருவரையும் கொன்றுவிடுவோம்” என மிரட்டியதும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, “நாங்கள் மேஜர் சேர்ந்து வாழ விரும்புகிறோம்” எனக் கூறி, நேற்று இருவரும் கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று பாதுகாப்பு கோரினர். இருதரப்பினரையும் அழைத்து பேசிய போலீசார், சட்டரீதியாக தடையில்லையென்பதால் இருவரையும் அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர் நள்ளிரவில் சதீஸ்குமார்–ராகவி இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி புறப்பட்டனர்.
அதே நேரத்தில், ஆத்திரம் அடங்காத ராகவியின் சகோதரர் ராகுல், நண்பர்கள் அய்யனார், அருள்பாண்டி ஆகியோருடன் திட்டமிட்டு காரில் பின்தொடர்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அய்யப்பட்டி அருகே அவர்கள் மோட்டார் சைக்கிளில் மோதியதில் இருவரும் சாலையில் வீழ்ந்தனர். அங்கேயே சதீஸ்குமாரை இருள் சூழ்ந்த பகுதியில் இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக கூறபடுகிறது; விபத்தில் ராகவி பலத்த காயமடைந்தார்.
தகவல் கிடைத்ததும் கொட்டாம்பட்டி போலீசார் விரைந்து வந்து சதீஸ்குமாரின் உடலை மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். ராகவி 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராகவி அளித்த புகாரின் பேரில் 8 பேருக்கு எதிராக கொலை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது. காதல் தொடர்பு, குடும்ப எதிர்ப்பு, மிரட்டல், திட்டமிட்டு தாக்குதல் என தொடர்ந்த இந்தச் சம்பவம், மேலூர்–பொட்டபட்டி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
