ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில், கள்ளக்காதலனுக்காகச் சொந்தக் கணவரையே கூலிப்படை வைத்துத் தீர்த்துக்கட்ட முயன்ற மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புரோட்டத்தூர் மண்டலம் லிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர் ரெட்டியின் மனைவி ஷில்பா ரெட்டிக்கும், அரசு மருத்துவமனை ஊழியர் நாக சுதீர் என்பவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஈஸ்வர் ரெட்டி தனது மனைவியைக் கண்டித்ததால், அவரை ஒழித்துக்கட்ட ஷில்பா திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தனது 14 சவரன் தங்க நகைகளை விற்று, சுமார் ₹10 லட்சம் பணத்தைக் கூலிப்படையாகச் செயல்படும் ரவுடிகளுக்கு ‘சுபாரி’ கொடுத்து கணவரைக் கொல்லச் சதி செய்துள்ளார்.

திட்டமிட்டபடி, ஈஸ்வர் ரெட்டி இருசக்கர வாகனத்தில் சென்றபோது ரவுடிகள் காரால் மோதி அவரைக் கொல்ல முயன்றுள்ளனர். விபத்தில் தப்பிய அவரை ரவுடிகள் கத்தியால் குத்த முயன்றபோது, சினிமா பாணியில் அவர்களிடம் இருந்து போராடித் தப்பிய ஈஸ்வர் ரெட்டி, நேராகக் காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது புகார் அளித்தார்.

கணவரின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள ரவுடிகள் மற்றும் அந்தப் பெண்ணின் கள்ளக்காதலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆசைக்காகப் பெற்ற கணவனையே கொல்ல ₹10 லட்சம் பேரம் பேசிய மனைவியின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.