மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள குடும்ப நீதிமன்றம், கடந்த 2019-ம் ஆண்டு, ஒரு கணவருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மனைவி மேல்முறையீடு செய்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் அதே தீர்ப்பை மீண்டும் உறுதி செய்து, பெண்ணின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரேவதி மொஹிட்டே டேரே மற்றும் நீலா கோகலே ஆகியோர் கூறியதாவது, “மனைவி கணவனுடன் உடலுறவைத் தவிர்ப்பதும், அவர் மீது ஆதாரம் இல்லாத வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதெனக் குற்றம் சுமத்துவதும் கணவனுக்கு மன வேதனையை ஏற்படுத்தும் ‘துன்புறுத்தல்’ (cruelty) ஆகும்” எனக் கூறினர்.
மேலும், மனைவி தனது கணவனை அவருடைய நண்பர்கள் முன்னிலையில் அவமதித்ததுடன், அவர் அலுவலக ஊழியர்களிடம் மோசமாக நடந்துகொண்டதும், திருமண உறவை சீர்குலைக்கும் வகையில் உள்ளன என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இத்தகைய சூழலில், கணவன் மீண்டும் வாழ்வதற்குத் தயங்குவதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து, மும்பை உயர்நீதிமன்றம், கணவனுக்கு விவாகரத்து வழங்கிய புனே குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டு, மனைவியின் மனுவை நிராகரித்தது. மேலும் இந்த தீர்ப்பு, திருமண உறவுகளில் ஒருபக்கமாக கடமைகளை புறக்கணிப்பதும், தவறான குற்றச்சாட்டுகள் கூறுவதும் சட்டப்பூர்வமாக துன்புறுத்தலாக கருதப்படும் என்பதை விளக்குகிறது.
