உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரத்தில் நடந்த கோரமான சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவை சேர்ந்த சதீஷ் மற்றும் அவரது சகோதரர் அமித் ஆகியோர், ஒரே வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். இவர்களது வீட்டில் வளர்த்து வந்த செல்லப்பிராணி நாய், கடந்த ஜூலை 8ஆம் தேதி பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவேந்திரா என்பவரது வீட்டருகே சென்று தொடர்ந்து குரைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நாயின் செயலால் ஆத்திரம் அடைந்த தேவேந்திரா, நாயை கிண்டல் செய்து பேசியுள்ளார். இதனால் கோபம் அடைந்த சதீஷ் மற்றும் அவரது சகோதரர் அமித் இருவரும் நேரடியாக தேவேந்திரா வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆவேசத்தில் மாறிய இருவரும், உள்ளே இருந்த கத்தியை எடுத்து, தேவேந்திராவின் முகத்தில் தாக்கியதுடன், அவருடைய மூக்கை அறுத்துவிட்டனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தேவேந்திரா மற்றும் அவரை பாதுகாக்க முயன்ற அவரது மனைவி முன்னி தேவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளாகக் கருதப்படும் சதீஷ் மற்றும் அமித் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
செல்லப்பிராணி நாயை கிண்டல் செய்ததற்காக நடந்த இந்த வன்முறை சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
