கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் வடலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் பள்ளி சீருடையிடன் சுற்றி திரிந்ததை பார்த்தார். உடனடியாக அந்த சிறுமிகளை அழைத்து விசாரித்தார். அந்த விசாரணையில் அவர்கள் விழுப்புரத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது தெரியவந்தது. அந்த மாணவிகள் கணக்கு பாடம் படிக்க கஷ்டமாக இருந்தால் டியூஷன் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.

நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சென்று பகல் முழுவதும் சுற்றி திரிந்து இரவு வீட்டிற்கு சென்றால் பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து வடலூருக்கு பேருந்தில் ஏறி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனியாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, படிக்க கஷ்டமாக இருந்தால் பெற்றோரிடம் கூறி தீர்வு காண வேண்டும், இது போன்ற தவறான செயலில் ஈடுபடக்கூடாது என போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாணவிகளுக்கு அறிவுரை கூறினார். பின்னர் போலீசார் மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து பாதுகாப்புடன் அவர்களை அனுப்பி வைத்தனர்.