கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் இருக்கும் தனியார் மாணவிகள் விடுதியில் 60 மாணவிகள் தங்கி இருக்கின்றனர். இங்கு சுகிர்தா என்பவர் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஜெயக்குமார் டிரைவராக இருந்தார். சுகிர்தாவை பிரபு என்பவர் வார்டன் பணிக்கு சேர்த்து விட்டதாக தெரிகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மாணவிகள் விடுதிக்கு செலுத்திய கட்டணத்தை சுர்கிதா தனது வங்கி கணக்கிற்கு கூகுள் பே மூலம் செலுத்தினால் தான் விடுதி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.

இதனை நம்பி ஏராளமான மாணவிகள் விடுதி கட்டணத்தை வங்கி கணக்கில் செலுத்தினர். ஆனால் சுகிர்தா அந்த பணத்தை விடுதி கணக்கில் சேர்க்காமல் 31 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துவிட்டார். இதற்கு சுகிர்தாவின் கணவர் ஜெயக்குமார், பிரபு ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இதுகுறித்து கோவை நகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபுவை கைது செய்தனர். தலைமறைவான சுகிர்தா, அவரது கணவர் ஜெயக்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.