தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த கே எஸ் அழகிரி மாற்றம் செய்யப்பட்டு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் செல்வப் பெருந்தகை மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார். மாநிலத் தலைவராக செல்வ பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் அவர் மீது கடந்த சில மாதங்களாகவே அதிருப்தியில் உள்ளனர். செல்வ பெருந்தகையால் புதிய நிர்வாகிகள் நியமனமோ அல்லது மாவட்ட தலைவர்கள் சீரமைப்போ  சரியாக செய்ய முடியவில்லை. அதே சமயம் மூத்த தலைவர்களும் இவருக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கட்சிக்குள் நிர்வாகிகள் மற்றும் செல்வ பெருந்தகை இடையே கருத்து மோதலும் நிலவி வருகிறது. இப்படியான நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையிடம் அதிருப்தி நிர்வாகிகள் புகார் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், காங்கிரஸ் கமிட்டியை சீரமைக்கும் பணியை செய்கின்றோமே தவிர வேரறுக்கும் பணியை நாங்கள் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் காமராஜர் ஆட்சி என்று கிடையாது. நல்லாட்சி நடந்தாலே அது காமராஜர் ஆட்சி தான். காமராஜர் ஆட்சியா நல்லாட்சியா என்ற புரிதல் இல்லாமல் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார் என்று செல்வ பெருந்தகை கூறியுள்ளார்..