செம்மங்குப்பம் அருகே கடந்த வாரம் நடந்த சோகமான விபத்தில், பள்ளி வேனுடன் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விபத்து நாள் காலை பயணிகள் ரயில் வருவதற்கு முன், ரயில்வே அதிகாரி விமல், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டை உடனடியாக மூடுமாறு தெரிவித்திருந்தார். ஆனால், பங்கஜ் சர்மா எந்த பதிலும் அளிக்கவில்லை. விசாரணையில் அவர் தூங்கிவிட்டதாகவும், விபத்திற்குப் பிறகு தான் கேட்டை மூடவில்லை என ஒப்புக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சலசலப்பான தகவல்கள் மக்களிடையே மேலும் கேள்விகளை எழுப்பி உள்ளது.

ரயில்வே தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், காலை 7.05 மணிக்கே கேட் மூடப்பட்டதாகவும், பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அழுத்தம் கொடுத்ததால் கேட்டை திறந்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. ஆனால் பங்கஜ் சர்மா தூங்கிக் கொண்டிருந்தது போல தகவல்கள் உறுதி செய்யப்படுவதால், ரயில்வே தரப்பில் முன்பு வெளியிடப்பட்ட தகவல்களுக்கு மாறான உண்மைகள் தற்போது வெளிவருகின்றன.

இந்த நிலையில்தான் பங்கஜ் சர்மா பணியாற்றிய கேட் பகுதிக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் புதிய கேட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பங்கஜ் சர்மா, விபத்து நிகழ்ந்ததும் மக்களிடம் இருந்து தப்பிக்க ஓடியதாகவும், அப்போது ஏற்பட்ட காயங்களால் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.