கோவையை சேர்ந்த ரெஜினா கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சரக்கு வாகனம் ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இவர் வீடு கட்டுவதற்காக கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு விஜயகுமார் என்பவரிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார். மாதம் 12,500 ரூபாய் வீதம் 15 மாதங்கள் தவணை தொகை செலுத்தியுள்ளார். அண்மையில் அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தினமும் வேலைக்கு செல்ல இயலாததால் அவரால் மாத தவணை செலுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கடன் கொடுத்த விஜயகுமார் மாதம் தோறும் வட்டி மட்டும் தான் செலுத்தி உள்ளீர்கள் அசல் தொகை அப்படியே உள்ளது என்று வட்டிக்கு வட்டி போட்டு பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ரெஜினா தனது மகனை அழைத்துக்கொண்டு கோவையிலிருந்து சென்னை வந்துள்ளார். சென்னை மெரினா கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவில் வந்தவர் தனது மகன் உடன் வந்ததால் கடந்த 5 தினங்களாக தவிப்புடன் சுற்றியுள்ளார்.

இரவு நேரத்தில் மெரினா கடற்கரையில் படுக்க விடாமல் போலீசார் விரட்டியதால் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று படுத்து உறங்கியுள்ளார். அங்கும் போலீசார் விரட்டியதால் என்ன செய்வது என்று தெரியாமல் விபரீத திட்டத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்த போது போலீசார் மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

வட்டிக்கு வட்டி கேட்டு மிரட்டியவருக்கு பயந்து ஓடி வந்ததாகவும், அசல் தொகையை மட்டும் தான் செலுத்த தயாராக இருப்பதாகவும் ரெஜினா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை போலீசாருக்கு தகவல் கொடுத்த மெரினா போலீசார் ரெஜினாவையும் அவரது மகனையும் கோவைக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். கடன் கொடுத்தவரை வரவழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கோவை போலீசாரும் உறுதி அளித்துள்ளனர்.