
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கன்னோஜ் மாவட்டத்தில் சவுரிக் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு உதவி ஆய்வாளராக ராம் கிரிபால் சிங் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் விவசாயி ஒருவரிடம் வழக்கை முடித்து வைப்பதற்காக செல்போனில் பேசினார். அப்போது அவர் நூதன முறையில் லஞ்சம் கேட்டுள்ளார். அதாவது 5 கிலோ உருளைக்கிழங்கு தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு விவசாயி 2 கிலோ தான் தருவதாக கூறினார். இதைத்தொடர்ந்து கடைசியாக 3 கிலோவுக்கு அவர் ஒப்புக்கொண்டார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி அமித் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.