உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் தயாராகி வரும் நிலையில், ஏஐ துறையில் ஒரு மாபெரும் புரட்சியைச் செய்யத் திட்டமிட்டுள்ளார். கோடிங் செய்வதை மிக எளிதாக்கும் ‘கர்சர்’ (Cursor) என்ற ஏஐ நிறுவனத்தை சுமார் 60 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் வாங்க மஸ்க் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்காக ஏற்கனவே கர்சர் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளைத் தனது xAI நிறுவனத்தில் இணைத்து வேலை பார்த்த மஸ்க், தற்போது அந்த நிறுவனத்தையே மொத்தமாகத் தூக்க முடிவு செய்திருப்பது டெக் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ​ஏற்கனவே என்விடியா போன்ற முன்னணி நிறுவனங்கள் கர்சர் நிறுவனத்தில் முதலீடு செய்யக் காத்திருந்த நிலையில், மஸ்க் முந்திக்கொண்டு இந்த டீலை முடித்துள்ளார்.

இதன் மூலம் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் இணைந்து ‘ஒப்பன் ஏஐ’ மற்றும் ‘கிளாட்’ போன்ற சக போட்டியாளர்களுக்குப் மிகப்பெரிய சவாலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாப்ட்வேர் புரோகிராமர்களின் வேலையை எளிதாக்கும் இந்த ஏஐ தொழில்நுட்பம், வரும் காலங்களில் ஐடி துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் ஒட்டுமொத்த உலகமும் எலான் மஸ்க்கின் இந்த அடுத்த கட்ட நகர்வை உற்றுநோக்கி வருகிறது.