சென்னை மாவட்டம் சோளிங்கநல்லூரைச் சேர்ந்தவர் தளவாய். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த தம்பதியினர் தூத்துக்குடியில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்றனர்.

அங்கு திருவிழாவை முடித்துவிட்டு நேற்று இரவு திசையன்விளையில் இருந்து மினி பஸ்ஸில் நெல்லை ஜங்ஷன் வந்துள்ளனர். அங்கிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்தனர். அந்த பெட்டியில் பயணிகள் கூட்டம் இல்லை. இருப்பினும் லட்சுமி தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி ஹேண்ட் பேக்கில் வைத்து பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளார்.

சிறிது நேரம் தூங்கிவிட்டு காலையில் தாம்பரம் ரயில் நிலையம் வந்ததும் ஹேண்ட் பேக் மற்றும் லக்கேஜ் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்ற பிறகு ஹேண்ட் பேக்கை திறந்து பார்த்தபோது சுமார் 30 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அப்போதுதான் ஹேண்ட் பேக்கில் அடியில் யாரோ பிளேடால் கிழித்து நகைகளை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து லட்சுமி தாம்பரம் ரயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.