ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரசார வாகனத்தில் ஏறி தொண்டர்களை நோக்கி கையசைத்த கட்சித் தலைவர் விஜயை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். அவரை பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகமாக முழக்கங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய விஜய், ஈரோடு மண்ணின் சிறப்புகளை நினைவுகூர்ந்தார். “பொதுவாக நல்ல காரியங்களை தொடங்கும்போது மஞ்சளை வைத்து வழிபடுவது நமது பாரம்பரியம். வீட்டில் அம்மாக்களும் சகோதரிகளும் நம்முடைய நலனுக்காக மஞ்சள் நிற உடைகளை அணிந்து வேண்டுதல் செய்வார்கள். அதுபோல், நமது கட்சிக் கொடியிலும் மஞ்சள் நிறம் இடம்பெற்றுள்ளது. மங்களகரமான மஞ்சள் விளையும் இந்த ஈரோடு மண்ணில், மஞ்சளைப் பற்றி பேசாமல் வேறு எங்கு பேச முடியும்?” என அவர் கூறினார்.

மேலும், ஈரோடு மாவட்டம் விவசாயத்திற்கு பெயர் பெற்ற பகுதி எனக் குறிப்பிட்ட விஜய், “இங்குள்ள விவசாயத்திற்கு பாதுகாப்பாக இருப்பது காலிங்கராயன் அணையும், காலிங்கராயன் கால்வாயும் தான். அந்த அணை மற்றும் கால்வாய் அமைக்கும் பணியின் போது காலிங்கராயன் மிகுந்த சோர்வடைந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது தாய், ‘தயிர் விற்ற பணம் தாழ்வாரம் வரை உள்ளது, மோர் விற்ற பணம் முகடம் வரை உள்ளது; அதை எடுத்துக்கொண்டு போய் கால்வாய் வெட்டு’ என்று தைரியம் அளித்ததாக வரலாறு சொல்கிறது” என எடுத்துரைத்தார்.

பெற்ற தாய் வழங்கும் தைரியத்தைவிட வலிமையான சக்தி வேறில்லை என்றும், அந்த தைரியமே ஒரு மனிதனை சாதனைகளுக்குத் தூண்டும் என்றும் விஜய் கூறினார். “அந்த தைரியத்தை தான் எனக்கு என்னுடைய அம்மா, அப்பா, சகோதரிகள், நண்பர்கள், தோழிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வழங்கி வருகிறீர்கள்” என அவர் தெரிவித்தார்.

மேலும், தன்னைப் பற்றி அவதூறுகளை பரப்பி மக்களை தவறாக நம்ப வைக்க முயற்சிக்கும் சிலர் இருப்பதாக குறிப்பிட்ட விஜய், “இது நேற்றோ இன்று தோன்றிய உறவு அல்ல. மக்களுக்கும் எனக்கும் 33 ஆண்டுகளுக்கு மேலான உறவு உள்ளது. இந்த விஜயை மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள்” என நம்பிக்கையுடன் பேசினார்.  சினிமாவில் நான் 10 வயது இருக்கும்போதே நடிக்க வந்து விட்டேன் அப்போதே எனக்கு மக்களுக்கும் உள்ள நெருக்கமான உறவு ஆரம்பித்துவிட்டது என்றார்.

மேலும் திமுக ஒரு தீய சக்தி எனவும் தவெக ஒரு தூய சக்தி எனவும் கூறிய விஜய் நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது என்றும் கூறினார். மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி அசிங்கப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்களின் காசில் மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம் என்று சொல்வீங்க. அப்படியே செஞ்சால் கூட ஓசியில் போற ஓசில போறம் என்று கூறி அசிங்கப்படுத்திரிங்க என்றார். இதில் அமைச்சர் பொன்முடியை எவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்தார். கேக்குறதுக்கு ஆள் இல்லை என்று நினைத்து விட்டீர்களா இந்த விஜய் இருக்கிறான். மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் கண்டிப்பாக இந்த விஜய் வந்து கேட்பான் நான் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் அதேபோன்று மக்களும் என் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று கூறினார்.