அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு நடைமுறை காரணமாக, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதன் தாக்கமாக, அந்நாட்டில் பயன்படும் ஆடைகள், காலணிகள், மின்னணு சாதனங்கள் மற்றும் பிற நுகர்வோர் பொருட்களின் விலை குறுகிய காலத்தில் உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனால், அமெரிக்காவில் உள்ள மக்கள் விலை உயர்வுக்கு முன்னதாகவே அவசியமான பொருட்களைப் பெருமளவில் வாங்கி குவிக்க தொடங்கியுள்ளனர். சூப்பர் மார்க்கெட்டுகள், ஆடையகங்கள் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் கூட தொடங்கியுள்ளதுடன், சில இடங்களில் பொருட்கள் தட்டுப்படும் நிலையும் உருவாகியுள்ளது. “விலை உயர்ந்த பிறகு வாங்க முடியாது என்பதால் இப்போதே வாங்கிக்கொள்கிறோம்” என பலரும் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்பின் இந்த பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பு உலகளாவிய பங்குசந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக, பல பங்குகள் விழுந்துள்ளதுடன், உலகளாவிய பணக்காரர்கள் பில்லியன் கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளனர். பொருளாதார நிபுணர்கள், இந்த வரி விதிப்பு உலகளாவிய வர்த்தகத்தை பாதித்து, பொருளாதார சுழற்சியில் தடைகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கின்றனர்.