தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அரசு நிர்வாகத்தை அதிரடியாக முடுக்கிவிடும் வகையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று ஒரே நாளில் ஆளுநரின் செயலாளர், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் சப்-கலெக்டர்கள் என மொத்தம் 25 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

​இந்த உத்தரவின்படி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளராக இருந்த சஜன்சிங் ஆர். சவான் ஆளுநரின் செயலாளராகவும், சென்னை முன்னாள் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உயர்கல்வித்துறை சிறப்பு செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அஜய் யாதவ் ஆவின் நிர்வாக இயக்குநராகவும், பிரதிவிராஜ் கரூர் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி பத்மநாபபுரம் சப்-கலெக்டர் விஜய் குமார் மீனா திருநெல்வேலி மாவட்ட கூடுதல் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளது உட்பட பல இளம் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் இந்த அதிரடி ‘சரவெடி’ இடமாற்ற உத்தரவு, கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.