“அதிமுகவினர் அல்லு, சில்லுன்னா, அவங்ககிட்ட ரகசியமா சால்வை போட்டு ஆதரவு கேட்டது தில்லுமுல்லா?” என்று தமிழக முதலமைச்சர் விஜய்யை நோக்கி திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா அதிரடியான கேள்விகளை எழுப்பியுள்ளார். தவெக தலைவர் விஜய் கூட்டணியைப் பொறுத்தவரை அநாகரிகமான அரசியல் செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய்யின் இரட்டை நிலைப்பாட்டை ஆதாரங்களுடன் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

​செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் பேசிய ஆ.ராசா, “முதலமைச்சர் விஜய் தன் பேச்சில் ஒவ்வொரு வரியிலும் திமுகவைக் குறை சொல்கிறார். திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்றும், மற்றவர்கள் எல்லாம் ‘அல்லு, சில்லு’ என்றும் பேசியுள்ளார். அப்படி பேசிவிட்டு, அதே அதிமுகவின் ஒரு அணியினரை ரகசியமாகச் சந்தித்து, சால்வை போட்டு ஆதரவு கேட்டாரே விஜய்… அது தில்லுமுல்லா, அல்லது அரசியல் அநாகரிகமா? சட்டம் – ஒழுங்கை மேம்படுத்த எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் எனக் கேட்கிறார். காவல் துறை உங்கள் கையில் தானே உள்ளது, அப்புறம் எதற்கு அவகாசம்?” என ஆ.ராசா சரமாரியாகக் கேள்வி எழுப்பி சாடியுள்ளார்.