தெலுங்கானா மாநிலத்தில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கும் வகையில் ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 8, 7 மற்றும் 5 வயதுடைய மூன்று சிறுமிகள், அவர்கள் மாயமான சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஒரு தண்ணீர்த் தொட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த மரணங்கள் திட்டமிட்டக் கொலைகளாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் குழந்தைகளின் தந்தைதான் அவர்களைத் தண்ணீர்த் தொட்டிக்குள் தள்ளி கொலை செய்திருக்கலாம் என்று பலத்த சந்தேகம் எழுந்துள்ளதால், இப்பகுதியில் பெரும் பரபரப்பும் சோகமும் நிலவுகிறது. தற்காலிகத் தகவல்களின்படி, குடும்பத் தகராறு அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவத்தன்று குழந்தைகளை அழைத்துச் சென்ற தந்தை, அவர்களைத் தொட்டிக்குள் தள்ளிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடியத் தந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், இந்த கொடூரச் செயலுக்கான உண்மையான பின்னணி என்ன என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிஞ்சுயிர்கள் அநியாயமாகப் பறிபோனது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆத்திரத்தையும் கண்ணீரையும் வரவழைத்துள்ளது.
