தோனியை போலவே சூப்பராக ஸ்டெம்பிங் செய்தது மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக  ஆடிய ரிச்சா கோஷை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்..

மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கேப்டவுனில் நேற்று இந்திய நேரப்படி மாலை 06:30 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை பாகிஸ்தான் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பிஸ்மா மரூஃப் 55 பந்துகளில் (7 பவுண்டரி) 68 ரன்களும், ஆயிஷா 25 பந்துகளில் (2 பவுண்டரி, 2 சிக்ஸ்) 43 ரன்களும் எடுத்து களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் ராதா யாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா மற்றும் பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியின்  தொடக்க வீராங்கனைகளான யாஸ்திகா பாட்டியா 17 ரன்களும், நல்ல துவக்கம் கொடுத்த ஷபாலி வர்மா 33 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து ஹர்மன்ப்ரீத் கவுர் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 13.3 ஓவரில் 93 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்திருந்தது. அதன்பின் ஜெமிமா மற்றும் ரிச்சா கோஷ் ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றிபெற செய்தது.

இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வென்றது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 38 பந்துகளில் (8 பவுண்டரி) 53* ரன்களுடனும், ரிச்சா கோஷ் 20 பந்துகளில்  (5 பவுண்டரி) 31* ரன்களும் களத்தில் இருந்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்ட  வீராங்கனை விருது வென்றார். இதனால் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீராங்கனைகளாக ஜவேரியா கான் மற்றும் முனீபா அலி ஆகியோர் ஆடினர். ஆனால் ஜாவேரியா 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து தீப்தி ஷர்மாவால் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராதா யாதவ் இந்தியாவுக்காக 7வது ஓவரை கையில் எடுத்தார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில், முனீபா, ரிச்சாவால்  ஸ்டம்பிங் செய்யப்பட்டார். தொடக்க ஆட்டக்காரர் முனீபா அலி 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ், மகேந்திர சிங் தோனியுடன் ஒப்பிடப்படுகிறார்.

 

ரிச்சாவின் திறமையால் ரசிகர்கள் ஈர்க்கப்பட்டனர், அவரை தோனியுடன் ஒப்பிட்டனர். அதுமட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் மிடில் வரிசையில் இறங்கி சிறப்பாக ஆடி பினிஷிங் கொடுத்துள்ளார். ஆம் கடைசி 3 ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டது. அய்மென் அன்வர் வீசிய பரபரப்பான 18வது ஓவரில் ரிச்சா கோஷ் 2, 3 மற்றும் 4 ஆகிய பந்துகளில் தொடர்ந்து 3 பவுண்டரி அடித்து மிரட்டினார். இதனால் அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இந்நிலையில் இந்திய அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். ரசிகர்களில் ஒருவர் ட்விட்டரில், “எம்எஸ்டியின் பெண் பதிப்பு போட்டியில் விளையாடுவது போல் தோன்றியது” என்று குறிப்பிட்டார். மேலும் இப்போட்டியின் போது அவர் அடித்த ஷாட் தோனி ஸ்டைல் போலவே இருப்பதாக ரசிகர்கள் அவருடன் ஒப்பிட்டுள்ளனர். அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது. ஸ்டெம்பிங் வீடியோவும் இணையத்தில் வெளியானதில் இருந்து நெட்டிசன்கள் ரிச்சா கோஷை பாராட்டி வருகின்றனர்.

 

https://twitter.com/_ravitweets/status/1624812076417040384