இங்கிலாந்தின் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் நகரத்தின் புதிய மேயராக 23 வயதுடைய இந்திய வம்சாவளி இளைஞரான துஷார் குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரிட்டன் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் மேயர் பதவியைப் பிடித்தவர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

மேலும் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற துஷார் குமார், தனது தாயார் பர்வின் ராணியின் அரசியல் ஈடுபாட்டைக் கண்டு ஈர்க்கப்பட்டார். அவரது தாயாரும் முன்னதாக இதே நகரத்தில் துணை மேயராகப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தனது 20ஆம் வயதிலேயே தொழிலாளர் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் களமிறங்கிய துஷார் குமார், உள்ளாட்சித் தேர்தலில் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவுன்சிலராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். திறம்படச் செயல்பட்ட அவர், பின்னர் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் டவுன் கவுன்சிலின் துணை மேயராகப் பொறுப்பேற்றார்.

தற்போது அவரது அர்ப்பணிப்பையும் மக்கள் நலப் பணிகளையும் பாராட்டி டவுன் கவுன்சில் உறுப்பினர்கள் அவரை ஒருமனதாக மேயராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஒருபுறம் நாட்டின் மிக இளம் வயது மேயராகப் பொறுப்பேற்று தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், மறுபுறம் தனது உயர் படிப்பையும் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருவது இளைஞர்களுக்குப் பெரும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.