தலைநகர் டெல்லியின் ஈஸ்ட் ஆஃப் கைலாஷ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், இளைஞர் மற்றும் இளம்பெண் ஆகிய இருவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறையில் இளம்பெண்ணின் உடல் படுக்கையிலும், இளைஞரின் உடல் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்த இளம்பெண் அஞ்சலி (26) என்பவர், நாக்பூரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நேரு பிளேஸ் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவருடைய வீட்டின் உரிமையாளர் இது குறித்துக் கூறுகையில், அஞ்சலிக்குத் தேவையான அனைத்து அடையாளச் சான்றுகள் மற்றும் காவல்துறை சரிபார்ப்புப் பணிகள் முறையாக முடிக்கப்பட்டு அவருக்கு வீடு வாடகைக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அந்த இளைஞர் யார் என்பது குறித்துத் தங்களுக்கு எந்தத் தகவலும் தெரியாது என வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். தற்போதைய சூழலில், இது இருவருக்குமிடையிலான தனிப்பட்ட விவகாரமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் விரிவான விசாரணைக்குப் பிறகே, உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
