இந்தியாவில் சொந்தமாக ஒரு பெரிய வீட்டை வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால், நாட்டின் பெரும் பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் சிலர் வசிக்கும் வீடுகளின் மதிப்பு பல நூறு கோடிகளைத் தாண்டுகிறது. மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமைந்துள்ள இந்த ஆடம்பர வீடுகள், அவற்றின் பிரம்மாண்டமான கட்டமைப்பு மற்றும் வசதிகளால் கவனம் ஈர்த்து வருகின்றன.
இந்த பட்டியலில் முதலில் இடம்பெறுவது தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடு தான். தெற்கு மும்பையில் அமைந்துள்ள இந்த 27 மாடி கட்டடத்தின் மதிப்பு ரூ.6,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பா, நீச்சல் குளங்கள், 80 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், சலூன், யோகா மற்றும் நடன ஸ்டுடியோக்கள், மூன்று ஹெலிபேடுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் வீடு மும்பையின் பாந்த்ராவில் அரபிக்கடலை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாளிகையின் மதிப்பு ரூ.200 கோடிக்கும் மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இஷா அம்பானி – ஆனந்த் பிரமால், குமார் மங்கலம் பிர்லா, கௌதம் சிங்கானியாவின் ஜே.கே. ஹவுஸ் ஆகியவையும் குறிப்பிடத்தக்க ஆடம்பர இல்லங்களாக உள்ளன.
இதுதவிர, ரத்தன் டாடாவுடன் தொடர்புடைய பேர்லான், விஜய் மல்லையாவின் பெங்களூருவில் உள்ள ஸ்கை மேன்ஷன், அமிதாப் பச்சனின் மும்பை ஜல்சா மற்றும் அனில் அம்பானியின் அபோட் ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் விசாலமான அறைகள், நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம், நூலகம், தோட்டம், பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடுகிறது.
