மத்திய பா.ஜ.க அரசு பாதுகாப்பு படையினருக்கு “ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்” திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் அந்தத் திட்டத்தின் கீழ் சில ஓய்வூதிய பெற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருந்தது. கடந்த மாதம் 9-ம் தேதி அது தொடர்பான விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம் வருகிற மார்ச் 15-ஆம் தேதிக்குள் ஓய்வூதிய நிலுவைத் தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஓய்வூதிய நிலுவைத் தொகையானது 4 தவணைகளாக நடபாண்டிற்குள் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதற்கு எதிராக ஓய்வூதியதாரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்நிலையில் தலைமை நீதிபதி டி.ஓய் சந்திர சூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே பி பார்த்திவாலா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு திங்கட்கிழமை இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்குவதற்கான அவகாசம் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி நிலுவைத் தொகையானது  4 தவணைகளாக வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் எப்படி அறிவிக்க முடியும். இந்த விவகாரத்தில் அமைச்சகம் மீது உச்ச நீதிமன்றம் ஏன் அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது.

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தன்னிச்சையான அறிவிப்பை வெளியிட அமைச்சகத்திற்கு எந்த வித உரிமையும் இல்லை. ஆனால் இந்த விவகாரத்தில் சட்டத்திற்கு எதிராகவே அமைச்சகம் செயல்பட்டு இருக்கிறது. அமைச்சகம் இப்படி செயல்படுவது முறையல்ல மேலும் அமைச்சக செயலகம் முறையாக செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஓய்வூதிய நிலுவைத் தொகை 4 தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சகமே திரும்ப பெற வேண்டும் அல்லது இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை அமைச்சக செயலகம் எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இது குறித்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என். வெங்கட்ராமன் கூறியதாவது, உச்ச நீதிமன்ற உத்தரவை அமைச்சகம் ஏற்கனவே செயல்படுத்த தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 22 லட்சம் ஓய்வூதியதாரர்களில்  8 லட்சம் பேருக்கு ஏற்கனவே ரூ.2,500 கோடி மதிப்புள்ளான ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் அடுத்த கட்ட  தவணைத் தொகையை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் நீதி உத்தரவை நிறுத்தி வைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. அதேபோல் ஓய்வூதிய தொகையை படிப்படியாக வழங்கவே மத்திய அரசு முயற்சி செய்கிறது என கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்த சூழலை விளக்கும் வகையிலான தனிப்பட்ட பிரமாண பத்திரத்தை பாதுகாப்பு அமைச்சக செயலகம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும்  வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஹோலி பண்டிகை கால விடுமுறைக்கு பின் நடைபெறும் என கூறியுள்ளனர்.