திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவர் விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரி. இந்த தம்பதியினருக்கு சங்கீர்த்தன்(18) என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய சங்கீர்த்தன் 230 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். நேற்று முன்தினம் 2-வது முறையாக சங்கீர்த்தனன் திருமுருகன்பூண்டியில் இருக்கும் மையத்தில் நீட் தேர்வை எழுதியுள்ளார்.

அன்றைய தினமே இரவு முழுவதும் மதிப்பெண் எவ்வளவு வரும் என சரிபார்த்துக் கொண்டே இருந்ததாக தெரிகிறது. அதன் பிறகு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு சங்கீர்த்தனன் காணாமல் போய்விட்டார். அந்த கடிதத்தில், அம்மா அப்பா நான் உங்களுக்கு கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை.

நான் டாக்டராகனும் என்று சொன்னவுடனே எனக்கு என்ன வேணும்னு கேட்டு எல்லாமே செஞ்சு கொடுத்தீங்க. என்னை கோச்சிங் கிளாஸ் எடுத்து விடுறேன்னு சொன்னீங்க. நான்தான் வீட்டில் இருந்தே படிக்கிறேன் என்று சொன்னேன். என்னால் சொன்னதை செய்ய முடியவில்லை. எனது கனவை விட முடியவில்லை. 18 வருஷமா கஷ்டப்பட்டு என்னை வளர்த்தீங்க. இனிமேல் நான் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பல.

நான் வீட்டை விட்டு வெளியே போறேன். நிரந்தரமா இல்ல. எல்லாம் கொஞ்ச நாள் தான். திரும்பி வருவேன் ஒரு எம்பிபிஎஸ் சீட்டோட. நான் இதுவரைக்கும் சொன்ன எதையும் செஞ்சது இல்ல. ஆனா நான் ஒரு எம்பிபிஎஸ் சீட்டோட வீட்டுக்கு திரும்பி வருவேன். நான் எந்த ஒரு தப்பான முடிவையும் எடுக்க மாட்டேன். நீங்களும் எடுக்க மாட்டீங்க என நம்பி தான் போறேன்.

இந்த முடிவு நான் செய்த தப்புக்கு நான் கொடுக்கிற தண்டனை. நிச்சயம் ஒரு டாக்டராக திரும்பி வருவேன். படிப்புக்கு தேவையான டாக்குமெண்ட்ஸ் மட்டும் எடுத்துட்டு போறேன். மீண்டும் திரும்பி வருவேன் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாயமான மாணவரை தேடி வருகின்றனர்.