விழுப்புரம் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் வன்னியர் சமூகத்துக்கான 10.5% இடஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி பாமக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “திமுக அரசு சமூகநீதி சார்ந்த இந்த தீர்வை நீண்ட நாட்களாக ஏற்க மறுக்கிறது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதும், அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் தவிக்கிறது என்பது வருத்தமானது” என தெரிவித்தார்.
தொடர்ந்து, “திமுக கூட்டணியில் உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 28 மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் – அதில் நான்கு பேர் அமைச்சர்கள் என இருக்கிறார்கள். இவர்கள் ஒருநாளாவது முதலமைச்சரை சந்தித்து, ‘எங்கள் சமுதாயத்தில் ஏழ்மை அதிகம் உள்ளது, மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் தவிக்கிறார்கள், வேலைக்குச் செல்ல முடியவில்லை, சமூக சீரழிவுக்கு ஆளாகிறார்கள், எப்படியாவது இடஒதுக்கீடு கொடுங்கள்’ என கூறியிருக்கிறார்களா?” என கடுமையாக கேள்வி எழுப்பினார்.
மேலும், “234 பேருள்ள சட்டமன்றத்தில் 38 வன்னியர் சமூகத்தினர் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கூடி, இடஒதுக்கீடு கொடுக்காத வரை சட்டமன்ற வாசலில் உட்கார்ந்துப் போராட முடியாதா? இது சலுகை அல்ல, உரிமை! உரிமையை பெற போராடத் தயாராக இருக்க வேண்டும்,” என வன்னிய சமூகத்தினரிடம் உற்சாகம் ஊட்டினார்.
மேலும் இடஒதுக்கீட்டை வழங்கத் தவறினால் ‘சாலை மறியல்’ போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். அனைத்து வன்னியருக்கும் உரிமையை அடையத் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்திய அன்புமணி, “இந்த அரசு இடஒதுக்கீட்டைக் கொடுக்கும் வரை நாம் அமைதியாகவும், ஜனநாயக வழியிலும் போராட வேண்டும்.
இது நம் சமூகத்தின் எதிர்காலம் குறித்த தீர்மான தருணம். திமுக வாக்குறுதி மீறியதற்கு நம்மால் சரியான பதிலை வரவழைக்கவேண்டும்” எனக் கூறினார். அவரது உரையால், பாமக – திமுக இடையேயான கூட்டணி உறவு பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
