பார்த்த் விஜய்வர்கியா என்ற அமெரிக்க வாழ் இந்தியர் தனது குடும்பத்துடன் பனிக்கட்டியில் சறுக்கி விளையாடும்போது (Ice Skating), எதிர்பாராத விதமாக அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அமெரிக்காவில் ஆம்புலன்ஸ் கட்டணம் மிக அதிகம் என்பதால், வலியைப் பொறுத்துக்கொண்டு ஒரு வாடகை காரிலேயே மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு ஒரு எக்ஸ்-ரே எடுக்கப்பட்டு, காலில் ஒரு சாதாரணக் கட்டு (Crepe Bandage) மட்டும் போடப்பட்டது. மொத்தமாக 1.5 மணி நேரம் மட்டுமே அவர் அந்த அவசர சிகிச்சைப் பிரிவில் (ER) இருந்தார்.
ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு அவருக்கு வந்த மருத்துவக் கட்டணத்தைப் பார்த்து அவர் நிலைகுலைந்து போனார். வெறும் ஒன்றரை மணி நேர சிகிச்சைக்கு மருத்துவமனை விதித்த கட்டணம் $6,354 (இந்திய மதிப்பில் சுமார் ₹5.2 லட்சம்). இதில் பார்த்தின் காப்பீட்டு நிறுவனம் (Insurance) $4,500 தொகையை ஏற்றுக் கொண்டபோதிலும், அவர் தனது கைக்காசாக $1,800 (சுமார் ₹1.5 லட்சம்) செலுத்த வேண்டியிருந்தது.
