சிவகங்கை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில், யாரும் எதிர்பார்க்காத ஒரு விபத்து ஏற்பட்டது. சீறிப்பாய்ந்த காளை ஒன்றின் கயிறு, எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஒரு இளைஞரின் காலில் சிக்கிக்கொண்டது. மாடு நிற்காமல் ஓடத் தொடங்க, அந்த இளைஞர் தரதரவென நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்த இளைஞரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பயம் அனைவர் மத்தியிலும் தொற்றிக்கொண்டது.
அந்த இளைஞர் யாரென்று கூடத் தெரியாத நிலையிலும், அவரை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மின்னல் வேகத்தில் அந்த மாட்டை நோக்கி ஓடினர். உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச் சென்று அந்த இளைஞரை மீட்டனர். ஆபத்தில் இருப்பவர் யாராக இருந்தாலும் உதவி செய்யத் துடிக்கும் இந்தத் தமிழர்களின் மனிதாபிமானம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. “மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது” என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு சாட்சி!
