
கோயம்புத்தூர் மாவட்டம் சொக்கம்புதூரை சேர்ந்தவர் ராஜ கணேஷ். இவர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ராஜ கணேசை கைது செய்தனர்.
பின்பு அவரிடம் விசாரணை நடத்திய போது, சூதாட்டத்திற்கான ஒரு செயலியின் உள் நுழைவு விவரங்களை வைத்திருந்த ராஜ கணேஷ் அவற்றின் மூலம் மற்றவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அதற்கு நிகரான நாணயங்களை மாற்றிக் கொடுத்து வந்துள்ளார்.
பின்பு சூதாட்டத்தில் வெற்றி பெற்றவர்களிடம் இருந்து கமிஷன் தொகையை எடுத்துக்கொண்டு மீதமுள்ள பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். அந்த கமிஷன் பணத்தின் மூலம் வேடப்பட்டி ஹரி ஸ்ரீ கார்டன் என்ற பகுதியில் ரூபாய் 50 லட்சத்திற்கு வீட்டுமனை வாங்கி உள்ளார். ரூபாய் 46 லட்சத்திற்கு மேல் வங்கி கணக்கில் வைப்பு தொகையாக வைத்துள்ளார்.
இது குறித்து அறிந்த போலீசார் அந்த சொத்தை முடக்கி ராஜ கணேஷ் வங்கி கணக்கில் இருந்த வைப்பு தொகையான ரூபாய் 46 லட்சத்தை முடக்குமாறு வங்கிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இதுகுறித்து போலீசார் ராஜ கணேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.