சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியில் 35 வயதுடைய ஐ.டி பெண் ஊழியர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் அந்த பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் கூறியதை நம்பி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு 66 லட்சத்து 22 ஆயிரத்து 450-ரூபாயை அனுப்பி வைத்தேன் ஆனால் கூறியபடி அவர் எனக்கு லாபத்தொகை தரவில்லை நான் கொடுத்த பணத்தையும் திரும்ப தரவில்லை.

அவர் மீது நடவடிக்கையை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபரின் வங்கி கணக்குகள் மற்றும் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அது உத்திர பிரதேசத்தை சேர்ந்த மனுஷ்குமார் என்பவரது பெயரில் இருந்தது. அவரது வங்கி கணக்குகளையும், செல்போன் எண்ணையும் மனிஷ்குமாரின் மகன் ரிதம் சவ்லா(20) பயன்படுத்தி வந்துள்ளார். இவர் ஒரு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இதனையடுத்து தனிப்படை போலீசார் உத்திரபிரதேசத்திற்கு சென்று குருநானக் நகரில் பதுங்கி இருந்த ரிதம் சவ்லாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் இதுவரை பொதுமக்களிடமிருந்து 1 கோடியே 60 லட்சம் பணத்தை மோசடி செய்து அதனை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாக ஒப்புக்கொண்டார். நேற்று ரிதம் சவ்லா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது வங்கி கணக்குகளில் இருந்து 19 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முடக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.