ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பர்மர் பகுதியில் நிகில் குமார் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஜவுளி கடை அதிபர். தொழிலதிபராக இருக்கும் இவர் கிறிஸ்துமஸ் மற்றும் ‌ புத்தாண்டு பண்டிகையை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடு திட்டமிட்டார். இதற்காக நண்பர்களுடன் சேர்ந்து இமாச்சல் பிரதேசத்தில் உள்ள குலு-மணாலிக்கு சுற்றுலா சென்றார். இவர் மணாலியில் பனிமலையில் தன் நண்பர்களுடன் பனிசருக்கு செய்து சாகசம் செய்த நிலையில் சந்திரா ஆற்றங்கரையில் நின்று புகைப்படம் எடுத்தார். அந்த ஆறு பனிக்கட்டியால் உறைந்திருந்த நிலையில், அவருடைய வெயிட்டை தாங்காமல் திடீரென ஐஸ்கட்டி உடைந்து விழுந்தது.

இதில் நிகில் குமார் ஆற்றுக்குள் விழுந்த நிலையில் நண்பர்கள் கண்முன்னே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அந்த பகுதியில் கடும் குளிர் நிலவியதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில் சுமார் 20 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஒரு கிலோமீட்டர் தொலைவில் அவர் பிணமாக மீட்கப்பட்டார். மேலும் ஒரு போட்டோவுக்காக நிகில் குமார் உயிரையே இழந்த நிலையில் அவருடைய இறுதி போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது.