ஹரியானா மாநிலம் குருக்ராமில் உள்ள சோஹ்னா சாலையில், காரை முந்திச் செல்வது தொடர்பான ஒரு சிறிய விவாதம், பயங்கரமான வன்முறையாக மாறியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 45 வயதான அபிஷேக் சௌத்ரி என்பவர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மஹிந்திரா ஸ்கார்பியோ-N காரில் இருந்தவர்கள் ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முயன்றுள்ளனர்.

மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அபிஷேக் தனது காரை நகர்த்த முடியாததால், அவர்களுக்கு வழி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அபிஷேக்கின் காரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று, ராஜீவ் சவுக் சிக்னல் அருகே வழிமறித்துள்ளது.

“>

பின்னர் காரில் இருந்து தடிகளுடன் இறங்கிய இரண்டு இளைஞர்கள், அபிஷேக்கின் காரின் முன்பக்கக் கண்ணாடி மற்றும் பக்கவாட்டு ஜன்னல்களை அடித்து நொறுக்கி, அவர் மீதும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த கொடூரமான தாக்குதலில் அபிஷேக்கிற்கு முகத்தில் கண்ணாடித்துகள்கள் குத்தி பலத்த வெட்டுக் காயங்களும், தோள்பட்டையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. ரத்தம் சொட்டச் சொட்ட, தனக்கு நேர்ந்த இந்த அநியாயத்தை அவர் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காயமடைந்த அபிஷேக் உடனடியாக போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த குருக்ராம் சதார் காவல் நிலைய போலீசார், பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இதனால் வீடியோ ஆதாரங்கள் மற்றும் காரின் பதிவு எண்களை வைத்து, தாக்குதல் நடத்திய 22 வயதுடைய பார்த்த் மற்றும் பராஸ் என்ற இரு பி.பி.ஏ (BBA) பட்டதாரி இளைஞர்களை சில மணி நேரங்களிலேயே போலீசார் கைது செய்து, அவர்களின் சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.