நியூயார்க்கில் வசிக்கும் 23 வயது இசபெல் ஜெய்ட்னர் சிறு வயதிலிருந்தே ஒரு வினோத பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். மனிதர்களின் குரல் போல இல்லாமல், அவரது தொண்டையிலிருந்து தவளை மாதிரியான சத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. முதலில் இது சாதாரண சளி என்று நினைத்த குடும்பத்தினர், சில காலத்தில் குணமாகிவிடும் என புறக்கணித்தனர். ஆனால் நிலைமைகள் மோசமடைந்ததால், இசபெல் பல மருத்துவர்களிடம் சென்றபோது தான் உண்மையான காரணம் வெளிச்சத்திற்கு வந்தது.

மருத்துவர்கள் நடத்திய ஆய்வில், அவருக்கு ரெட்ரோகிரேட் க்ரிகோபாரிஞ்சியஸ் டிஃப்ஃபான்ஷன் (Retrograde Cricopharyngeus Dysfunction) எனப்படும் “நோ பர்ப் சிண்ட்ரோம்” எனும் அரிய நோய் இருப்பது தெரியவந்தது. இந்த நோயால் தொண்டையின் மேல் பகுதியில் உள்ள க்ரிகோபாரிஞ்சியஸ் தசை சரியான நேரத்தில் தளரவில்லை. இதனால் வயிற்றில் குவியும் வாயு வெளியில் வராமல் தொண்டையில் சிக்கி, தவளை போல் விசித்திரமான சத்தம் எழுகிறது.

இசபெல் கூறுகையில், “9 வயதிலிருந்தே சாப்பிட்ட பிறகு தொண்டையில் சத்தம் வரும். நண்பர்கள் என்னை தவளை என்று கிண்டல் செய்வார்கள். வீக்கம், நெஞ்செரிச்சல், வாந்தி போன்ற பிரச்சனைகளும் அடிக்கடி வந்தன” என்றார். மருத்துவர்கள் கூறுவதாவது, இந்த அரிய நோய் சாப்பிடுவதிலும், குடிப்பதிலும், சுவாசிப்பதிலும் சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால் வயிற்றில் காற்று அடைபட்டு, தொண்டையில் தவளை சத்தம் போல் ஒலி எழுவது இயல்பாகிறது. இந்த அரிய மருத்துவ நிலை தற்போது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.