லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

2024 ஐபிஎல்லில் 21வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நேற்று  லக்னாவில் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். இதில் டி காக் 6 ரன்னில் அவுட் ஆகி  வெளியேறியதை தொடர்ந்து, வந்த தேவ்தத் படிக்கல் 7 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து கே.எல் ராகுல் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இருவரும் சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். பின் ரன்னுக்கு போராடிய கே.எல் ராகுல் 31 பந்துகளில் 33 ரன்னில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். பின் சிறப்பாக ஆடிவந்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 43 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 58 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின் நிகோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் பதோனி கைகோர்த்து ஆடினர். பதோனி 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியில் பூரன் அவர் பங்குக்கு 22 பந்தில் 32 ரன்கள் எடுத்த நிலையில், க்ருனால் பாண்டியா 2 ரன்னில்  அவுட் ஆகாமல் இருந்தார். முடிவில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் நல்கண்டே ஆகியோர் தலா 2விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கி நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதனால் பவர் பிளேக்குள் குஜராத் 50 ரன்கள் கடந்தது. இதையடுத்து யஷ் தாகூரின் பவர் பிளேவின் 6வது ஓவரில் கடைசி பந்தில் சுப்மன் கில் 19 ரன்னில் கிளீன் போல்ட் ஆனார்.

தொடர்ந்து கேன் வில்லியம்சன் ஒரு ரன்னில் ரவி பிஷ்னாயின் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார் தொடர்ந்து நல்ல துவக்கம் கொடுத்த சாய் சுதர்சன் 23 பந்துகளில் 31 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதையடுத்து வந்த பி.ஆர். சரத்2, விஜய் சங்கர் 17, தர்ஷன் நல்கண்டே 12, ரஷீத் கான் நக் அவுட், உமேஷ் யாதவ் 2 என அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

பின் ஓரளவு போராடிய ராகுல் தெவாட்டியாவும் (25 பந்துகளில் 30 ரன்கள்) எடுத்து ஆட்டமிழக்க, நூர் அகமது 4 ரன்னில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இறுதியில் குஜராத் அணி 18.5 ஓவரில் 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய குஜராத் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் ஜோடி 54 ரன்களுடன் சிறப்பான தொடக்கத்தை அளித்தது. ஆனால் லக்னோவின் சுழல் ஆட்டத்தை மாற்றியது, ரவி பிஷ்னோய் (1) மற்றும் க்ருனால் பாண்டியா(3)இணைந்து 5 விக்கெட்டுகளை எடுக்க, யஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகளை எடுத்து போட்டியை லக்னோ பக்கம் திருப்பினார்.. மேலும் நவீன் உல்-ஹக் ஒரு விக்கெட் எடுத்தார். 

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது லக்னோ அணி. இதற்கு முன் 2022 மற்றும் 2023 சீசன்களில் 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்திருந்த லக்னோ அணி முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு 4போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்திற்கு சென்றுள்ளது லக்னோ.