உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், ஆன்லைன் உணவு டெலிவரி நபரை செக்கியூரிட்டி கார்டுகள் உள்ளே அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் அங்கு பெரும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதுகாப்புப் பணியாளர்களைத் தாக்கி, அச்சுறுத்திய இந்தப் பெண்ணின் அடாவடித்தனம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஆன்லைனில் உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். உணவுடன் சொசைட்டி கேட் பகுதிக்கு வந்த டெலிவரி நபரை, பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி செக்கியூரிட்டி கார்டுகள் உள்ளே நுழைய அனுமதி மறுத்து தடுத்துள்ளனர். இதைக் கேள்வியுற்ற அந்தப் பெண், தனது வீட்டு வாசலில் இருந்து ஆக்ரோஷமாக நுழைவு வாயிலுக்கு வந்துள்ளார். டெலிவரி பாயைத் தடுத்ததற்காக செக்கியூரிட்டி பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், சொசைட்டி கேட் பகுதியைக் கலவர பூமியாக மாற்றினார்.
Greater Noida West की Amrapali Centurian Park Terrace Homes सोसाइटी में महिला ने मचाया हंगामा। 🚨 pic.twitter.com/jl5Nb9J26Z
— Greater Noida West (@GreaterNoidaW) August 26, 2026
இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்களை நோக்கி அப்பெண் சரமாரியாக அவதூறான வார்த்தைகளால் திட்டுவது பதிவாகியுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் காவலாளிகளில் ஒருவரை நோக்கி காலாலும் அடிக்க முயன்ற அவர், மற்றொரு செக்கியூரிட்டி கார்டை தனது கைகளால் ஓங்கி குத்துகிறார். தன்னை யாரும் நெருங்கக் கூடாது என மிரட்டியதுடன், தங்களைச் சமாளிக்க முடியாவிட்டால் காவல்துறையினரை அழைத்துக்கொள்ளுங்கள் என்று சவால்விட்டு கத்தினார். மேலும், “906” என்ற எண்ணைக் குறிப்பிட்டு அவர் பேசியதும் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது.
சொசைட்டி கேட்டில் பாதுகாப்புப் பணியாளர்களைத் தாக்கிய இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் இந்த விவகாரத்தைக் கவனத்தில் கொண்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட பெண் மீது சட்டப்பூர்வமான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலிம் டெலிவரியை உள்ளே அனுமதிக்காததைக் காரணம் காட்டி பெண் ஒருவர் பொதுவெளியில் செக்கியூரிட்டிகளைத் தாக்கிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
