
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் இன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் திரையுலகில் தன் திறமையால் நடனம், நடிப்பு மற்றும் உச்சரிப்பு என அனைத்திலும் சிறந்து விளங்கி ஒவ்வொரு வீட்டிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களின் மனங்களையும் வென்று எல்லோருடைய நேசத்தையும் பெற்று உச்சம் தொட்டு உயர்ந்த நிற்கும் அன்புத் தம்பி.
காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்க்கையில் சரித்திர மாற்றத்தை கொண்டு வருவதற்காக தற்போது அரசியலில் அடி எடுத்து வைத்துள்ளார். அவர் மக்கள் நலனுக்காக அரசியலில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். மேலும் என்னுடைய அன்பு தளபதி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், என்னுயிர் தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சீமான் மற்றும் விஜய் இருவரும் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் நடிகர் விஜய்க்கு அவர் பிறந்த நாள் வாழ்த்து கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.