ஜெர்மன் நாட்டில், தனது சந்தை ஆதிக்கத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு 572 மில்லியன் யூரோ ($617 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிரபலமான விலை ஒப்பீட்டுத் தளங்களான Idealo மற்றும் Producto ஆகியவை கூகுள் மீது வழக்குத் தொடர்ந்தன. அதாவது, கூகுள் தனது சொந்தச் சேவையான “Google Shopping”-ஐ தேடல் முடிவுகளில் மேலே காட்டி, Idealo போன்ற போட்டி நிறுவனங்களின் தளங்களை வேண்டுமென்றே பின்னுக்குத் தள்ளியதாக நீதிமன்றம் கண்டறிந்தது. இது நியாயமான சந்தைப் போட்டிக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின்படி, கூகுள் நிறுவனம் Idealo-விற்கு 465 மில்லியன் யூரோவும், Producto-விற்கு 107 மில்லியன் யூரோவும் இழப்பீடாக வழங்க வேண்டும். இருப்பினும், இந்த இழப்பீட்டுத் தொகை தங்களுக்கு ஏற்பட்ட “உண்மையான சேதத்தில் ஒரு சிறு பகுதி மட்டுமே” என்று Idealo நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது. “சந்தை ஆதிக்கத்தை தவறாகப் பயன்படுத்துவது ஒரு லாபகரமான வணிக மாதிரியாக மாறக்கூடாது” என்று Idealo இணை நிறுவனர் கருத்துத் தெரிவித்துள்ளார்.