ஒப்பற்ற பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு, அதன் நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தற்போது மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 2 பில்லியன் டாலர் கடனை, வரும் ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் முழுமையாகத் திருப்பிச் செலுத்துமாறு அமீரக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுமட்டுமன்றி, இந்தக் கடனுக்கான வட்டி விகிதத்தை 3 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்த்தி பாகிஸ்தானின் தலையில் கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது துபாய்.
மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போரை நிறுத்த பாகிஸ்தான் தூதரக ரீதியாக முயற்சி செய்து வரும் வேளையில், போரை ஆதரிக்கும் அமீரகத்தின் இந்த திடீர் நிபந்தனை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அரசுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே சமாதானம் பேச பாகிஸ்தான் முயன்றது.
ஆனால், இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை ஓரம் தள்ளிவிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தற்போது மத்தியஸ்தராகக் களம் இறங்கியுள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்றால் மட்டுமே போர் நிறுத்தம் சாத்தியம் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் போர் நிறுத்த முயற்சியில் தோல்வி, மறுபுறம் அமீரகத்தின் கடன் நெருக்கடி என பாகிஸ்தான் தற்போது ‘இக்கட்டான’ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் 17-க்குள் கோடிக்கணக்கான டாலர்களைத் திரட்ட முடியாமல் பாகிஸ்தான் திவாலாகும் நிலைக்குச் செல்லுமா என்ற அச்சம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
