மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வருமான வரிச் சட்ட விதிகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. இந்த புதிய மாற்றத்தில் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் பல முக்கிய விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சட்டப் பிரிவுகளின் எண்ணிக்கை 819-லிருந்து 536-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கடினமான வார்த்தைகளுக்குப் பதிலாகப் புதிய அட்டவணைகளும், கணக்கீட்டு சூத்திரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.வீட்டு வாடகை படி சலுகையைப் பொறுத்தவரை, இதுவரை 4 நகரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த 50 சதவீத வரிவிலக்கு சலுகை, இனி 8 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், இந்தச் சலுகையைப் பெறுவதற்கு வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் குறித்த முழுமையான தகவல்களை வழங்குவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது வாடகை ஒப்பந்த முறையை முறைப்படுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.பணப் பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர பான் கார்டு (PAN) பயன்பாடு பல இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கியில் ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய்க்கும் மேல் டெபாசிட் செய்யவோ அல்லது பணம் எடுக்கவோ பான் கார்டு அவசியம். மேலும், 5 லட்ச ரூபாய்க்கு மேல் வாகனம் வாங்குதல், ஹோட்டல்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்தல் மற்றும் 20 லட்ச ரூபாய்க்கும் அதிகமான சொத்து பரிமாற்றங்களுக்கும் பான் கார்டு இனி மிக முக்கியத் தேவையாக இருக்கும்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, கிரிப்டோ கரன்சி மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பரிவர்த்தனை விவரங்களையும் வரித் துறையிடம் சமர்ப்பிப்பது இனி கட்டாயமாகும். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சியான சி.பி.டி.சி அதிகாரப்பூர்வமான பணப் பரிமாற்ற முறையாகச் சட்டப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருவதால், பொதுமக்கள் தங்கள் நிதித் திட்டமிடல்களை அதற்கேற்ப அமைத்துக்கொள்வது அவசியமாகும்.