கடலூர் மாவட்டத்தில் உள்ள அதர் நத்தம் கிராமத்தில் கோபால், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே இட பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இதனால் இருவரும் நிலத்தை அளவீடு செய்து தருமாறு திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவில் மனு கொடுத்தனர். இந்நிலையில் நில அளவையர் வெள்ளியங்கிரி என்பவர் கோபால், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பிரச்சனைக்குரிய இடத்தை அளவீடு செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே கிராமத்தில் வசிக்கும் விவசாயியான ஞானவேல் என்பவர் திடீரென வெள்ளியங்கிரியை வழிமறித்து தனது நிலத்தை அளவீடு செய்து தருமாறு மனு கொடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. ஏன் நிலத்தை அளவீடு செய்து தரவில்லை? என கேட்டு வெள்ளியங்கிரியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மயங்கி விழுந்த வெள்ளியங்கிரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஞானவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.